நம் எல்லோர் வீட்டிலும் குக்கர் இல்லாமல் இருக்காது. பிரஷர் குக்கரை உபயோகித்தால் 30% வரை எரிபொருளை சேமிக்கலாம். அதை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்களும் புரிந்துக் கொள்ளுங்கள். இதை பற்றி மற்ற நண்பர்களிடமும் கூறுங்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் வீட்டை நிர்வகித்து வரும் இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் உதவியாக இருப்பது பிரஷர் குக்கர். பெண்களுக்கு ‘பிரஷர்’ ஏறாமல், சமையலை எளிதாக முடிப்பதற்கு உதவும் பிரஷர் குக்கரை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது முக்கியம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரஷர் குக்கரில் உணவு சமைக்கும்போது 90 முதல் 95 சதவிகித ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் கிடைப்பதாக இத்தாலியின் ‘ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ்’ எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அலுமினியம், காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் என பல வகையான உலோகங்களில் பிரஷர் குக்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பிரஷர் குக்கரை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

பிரஷர் குக்கரில் பயன்படுத்தும் ‘கேஸ்கட்’ எனும் ரப்பர் வளையத்தை, உபயோகப்படுத்தாதபோது குக்கரில் இருந்து கழற்றி, குளிர் சாதனப் பெட்டியின் பிரீஸரில் வைக்கலாம். இந்த வசதி இல்லாதவர்கள் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ‘கேஸ்கட்’டைப் போட்டு வைக்கலாம். இதன் மூலம் ‘கேஸ்கட்’ விரைவாக சேதம் அடைவதைத் தடுக்க முடியும்.ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை கேஸ்கட்டை அவசியம் மாற்ற வேண்டும்.

பிரஷர் குக்கரின் மூடியில் இருக்கும் துவாரங்களில் ஏற்படும் அடைப்பை, சிறிய ஊசியின் உதவியால் நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் முடிந்த பின்பு, குக்கரில் சமைத்த உணவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது. பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, அதில் பாதி அல்லது முக்கால் பாகம் தான் சமைக்கும் உணவுப்பொருள் இருக்க வேண்டும். முழு கொள்ளளவு வரை இருக்குமாறு சமைக்கக் கூடாது. குக்கரை மூடும் போதே ‘விசில்’ போடக்கூடாது. நீராவி நன்றாக வெளிவர ஆரம்பித்த பிறகே அதில் விசிலைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் குக்கர் சீராக இயங்குவதோடு நீண்ட நாள் உழைக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin