நம் வீட்டில் இருக்கும் எல்லோருக்குமே பிடித்த ஒரு பொருள் என்றால், அந்த வரிசையில் அப்பளமும் ஒன்று. இந்த அப்பளத்தை அதிக விலை கொடுத்து, நாம் கடையில் இருந்து வாங்குகின்றோம். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தோம் என்றால், சுலபமான, சுவையான அப்பளத்தை நம் வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? தெரிஞ்சுக்கலாம் வாங்க! இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் உளுந்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த உளுந்தை, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் குருணை சல்லடையில் நிற்கும் அல்லவா? மீண்டும் அதை மிக்சியில் போட்டு எவ்வளவு முடியுமோ, அந்த குருணையை நைசாக அரைத்து, சலித்து கொள்ளுங்கள். மீதம் இருக்கும் நறநற பருப்பை இட்லிக்கு மாவு ஆட்டும் போது சேர்த்துக்கொள்ளுங்கள். அப்பள மாவு பிசைய, நைசாக இருக்கும் உளுந்து மாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
முதலில் அகலமான பாத்திரத்தில் தயாராக இருக்கும், நைசாக அரைத்து வைத்திருக்கும், உளுந்த மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பையும், சோடா உப்பையும் சேர்த்து முதலில் மாவோடு கலந்து விட்டு, அதன் பின்பாக, பூரி மாவு பிசையும் பதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் ஊற்றி உளுந்த மாவை பிசைய வேண்டும். சிலபேர் சப்பாத்தி மாவை கொஞ்சம் இலகுவாக பிசைவார்கள். ஆனால் அப்பளதிர்க்கு மாவு பிசையும் போது, முதல் கட்டத்தில், அப்பள மாவானது, பூரி மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டி ஆகத்தான் இருக்க வேண்டும்.
நீங்கள் பிசைந்துகொண்டே இருக்கும்போது, அந்த உளுந்த மாவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி கெட்டி பதத்திற்கு மாறும். மீண்டும் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு, நன்றாக பிசைய வேண்டும். இப்போது உங்கள் கைகளில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெயை எடுத்து, மாவில் பரவலாக ஊற்றி, அந்த அப்பளம் மாவை மறுபடியும் பிசைய தொடங்க வேண்டும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .