உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்!

ஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது. உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் பாதிப்புகள், சரியான அளவு உடலுழைப்பை மேற்கொள்வதால் குறையலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

சுறுசுறுப்பில்லாமல் உட்கார்ந்த படி வேலை செய்வது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பம், சமூகம் என்று எல்லா பக்கமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நமது ஆரோக்கியம் பற்றி கவலை கொள்வதில்லை.

மேலும் இந்த கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த வாழ்க்கை முறை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. ஓடியாடி வேலை செய்தவர்கள் கூட இன்று வீட்டில் அமர்ந்தபடி இருக்கிறார்கள். ஆனாலும் சிலர் காலையில் யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

வீட்டில் இருந்தபடி வேலை செய்வது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியாத சூழ்நிலையில் நம்மை நாம் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக உட்கார்ந்தபடி வேலை செய்வதால் நீங்கள் உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவசியம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நேரம் இது.

எடை அதிகரிப்பு

உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பாதிப்பு உடல் எடை அதிகரிப்பு. மிக அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் போன்றவை பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளுடன் தொடர்பு கொண்டவையாகும். இதனால் டைப் 2 நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

உடலின் நெகிழ்வுத்தன்மை இழக்கப்படுகிறது

நீங்கள் உட்கார்ந்திருக்கும் நேரம் அதிகரிப்பதால் மற்றும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பதால் உங்கள் நெகிழ்வுத்தன்மை இழக்கப்படுகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மை குறைவதனால் தசைகளில் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசைகள் பலவீனமாகிறது. இது காலப்போக்கில் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும்.

எலும்புப்புரை நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது

எலும்புப்புரை என்பது எலும்புகள் பலவீனமானமாகும் ஒரு நிலையாகும். இதனால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பொதுவாக வயது முதிர்ந்தவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மெனோபாஸ் கடந்த பெண்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர். உட்கார்ந்தபடி வேலை செய்வதனால் எலும்புப்புரை நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்பதால் உடற்பயிற்சி மூலம் உங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள முடியும்.

மனநல ஆரோக்கியம் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது

இந்த லாக் டவுன் காலகட்டம் மற்றும் பெருந்தொற்று குறித்த பயம் நமது மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. உட்கார்ந்தபடி வேலை செய்வது இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது. மனஅழுத்தம் உண்டாக்கும் இந்த வாழ்க்கைமுறையில் இருந்து மீளும்போது நமது மன ஆரோக்கியம் அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் சில மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் நமது மன ஆரோக்கியம் மேம்படுகிறது.

தாமதமான வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான கோளாறுகள்

உங்கள் உடல் நீங்கள் உட்கொள்ளும் உணவை எரித்து ஆற்றலாக மாற்றும் விகிதம் வளர்சிதை மாற்றம் என்று அறியப்படுகிறது. நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் உடலுக்கு ஆற்றல் தேவைப்படவில்லை என்ற அறிகுறி உணர்த்தப்பட்டு வளர்சிதை மாற்றம் மெதுவாகிறது. வளர்சிதை மாற்றம் தாமதமாகும் போது எடை அதிகரிப்பு உண்டாகிறது. உடல் செயல்பாடுகள் இல்லாத நிலையில் செரிமானம் பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு, வயிறு தொடர்பான பாதிப்புகள் போன்றவை உண்டாகின்றன .

உடலின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகள்:

1. லிபிட்க்கு மாற்றாக படிகளை பயன்படுத்தி ஏறலாம் .
2. தினசரி மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு நடந்து செல்லலாம்.
3. பூங்காவில் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
4. குடும்பத்தினருடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்வதால் அனைவரும் நன்மை அடையலாம்.
5. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றலாம்.