தயிர் இன்றியமையாத சத்தான ஒரு உணவுப் பொருள். புளிக்காத தயிரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. அதேசமயம் தரமான தயிர், வெளியே கிடைப்பது குதிரைக் கொம்பு. அப்படியே வைத்திருந்தாலும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துத் தருவார்கள். இதைத் தவிர்க்க வீட்டில் இருந்து கொண்டே ஆரோக்கியமான கெட்டித் தயிர் நாமே தயாரித்து பயன்படுத்தலாம். குறிப்பாக பாலை தயிராக மாற்றத் தேவையான உறை தயிர் இல்லாமலேயே நாம் தயிர் தயாரிக்க முடியும். அது எப்படி என்று சமையல் கலை வல்லுநர் நிஷா மதுலிகா கூறுகிறார். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


தயிர் செய்வதற்கு தேவையான முக்கிய மூலப்பொருள் ஸ்டார்டர் அல்லது ஈஸ்ட் ஆகும். முதலில் ஸ்டார்டர் செய்வது எப்படி என்று இங்கு காண்போம். ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக சூடாக்க வேண்டும். இப்போது 2 பச்சை அல்லது சிவப்பு மிளகாயை பாலில் தண்டுடன் இட வேண்டும். பிறகு அதில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும். பின்னர் பாத்திரத்தை 10 முதல் 12 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஸ்டார்டர் ரெடியாகி இருக்கும்.

இப்பொழுது தயிர் எப்படி செய்வது என்று காண்போம். ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக சூடாக்க வேண்டும். பிறகு 2 டீஸ்பூன் ஸ்டார்டரை எடுத்து அதில் இட வேண்டும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்திற்கு பாலை மாற்ற வேண்டும். அதன் பின் 7 முதல் 8 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும் . இப்போது திறந்து பார்த்தால் நீங்கள் விரும்பிய ஆரோக்கியமான தயிர் ரெடியாகி இருக்கும்.

தயிர் செய்வதற்கு எப்போதுமே கிரீம் போன்று உள்ள பாலை பயன்படுத்த வேண்டும். பாலைக் கொதிக்க வைத்த பின்னர் சில நிமிடங்கள் நன்றாக ஆற வைக்க வேண்டும். இதில் தண்டுடன் கூடிய மிளகாயை எப்போதும் பயன்படுத்த வேண்டும். தண்டில் உள்ள சாறு தயிருக்கு உள்ளார்ந்த புளிப்பு சுவையை கொடுக்க உதவுகிறது. இந்த தயிரின் சுவையைக் காட்டிலும் மாறு பட்ட ஒன்றாக இருக்கும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin