சர்க்கரை நோய் உள்ளவர்கள் பால் குடிக்கலாமா? கூடாதா? பதில தெரிஞ்சுக்க இத படிங்க…

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் பால் என்பது ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. பிறந்த நாள் முதல் மனிதன் குடிக்க ஆரம்பித்த பாலை எவராலும் தவிர்க்க முடியாது. ஏதாவது ஒரு வகையில் பாலை எடுத்துக் கொள்ள தான் செய்கின்றனர். ஏனென்றால், பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது. அதுமட்டுமல்லாது இதில் கார்போஹைட்ரேட்டும் உள்ளது.

எனவே, டயட் கடைப்பிடிக்கும் நீரிழிவு நோயாளிகள் சற்று கவனமாக தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களான, தயிர், சீஸ், பன்னீர், மோர், நெய் என ஒவ்வொன்றிலும் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் ஒரு வேளைக்கு 45 முதல் 60 கிராம் கார்போஹைட்ரேட்டை சேர்க்க வேண்டும். ஆனால் நடைமுறையில் 60 கிராம் என்பது சற்று அதிகம்.

நீங்கள் காலை உணவின் போது ஒரு டம்ளர் பால் குடித்தால் (அதில் சுமார் 15 கிராம் அளவிற்கு கார்போஹைட்ரேட் இருக்கும்), உங்கள் உணவில் எத்தனை கலோரிகள் அதிகரிக்கின்றன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். இன்சுலின் எதிர்ப்பு என்பது நீரிழிவு நோயின் ஒரு பகுதியாக இருப்பதால், பாலின் கொழுப்பு அளவை பொறுத்தது.

எந்த வகை பால் சிறந்தது?

கொழுப்பு நிறைந்த பால்
பாலில் க்ரீம் போன்ற பொருட்கள் இருந்தால் அதனை கொழுப்பு நிறைந்த பால் என்பர். இந்த பாலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதால், அவற்றில் கலோரிகளும் அதிகமாகவே காணப்படும்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் (Skimmed Milk)

கொழுப்பை நீக்கப்பட்ட பாலானது ஸ்கிம்டு பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பாலில் கொழுப்பின் அளவு குறைவாகவோ அல்லது கொழுப்பே இல்லாமலோ இருக்கும். அதேசமயம் அதில் கார்போஹைட்ரேட்டுகள் காணப்படும்.

பாதாம் பால்

பசு அல்லது எருமை மாட்டு பாலை, காட்டிலும் பாதாம் பால் மிகவும் சிறந்தது என்றே கூறலாம். ஏனென்றால், இதில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை வைத்து பார்க்கும் போது, நீரிழிவு நோயாளிகளுக்கு பசு அல்லது எருமை மாட்டு பால் ஆரோக்கியமானது அல்ல என்று தெரிகிறது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வேறு சில விஷயங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.

ஆல்மெண்ட் அன்ஸ்வீட்டன்ட் வெண்ணிலா மில்க்

இந்த வகை பாலானது, லாக்டோஸ் இல்லாமல், கால்சியம் நிறைந்து, சற்று இனிப்பு சுவையும் கொண்டது. ஒரு கப் பாலில் 40 கலோரிகள், 0 சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 2 கிராம் கார்கோஹைட்ரேட் இருக்கும். அதன் தனித்துவமான நட்ஸ் சுவையானது, காலை உணவுகளான சீரியல்ஸ் மற்றும் முழு தானிய ரொட்டி துண்டுகளுக்கு சரியான துணையாக இருக்கக்கூடும்

டைப் 2 நீரிழிவு நோய்க்கு நன்மையளிக்கும் கொழுப்பு நிறைந்த பால்

2013 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில், ஒரு ஆய்வானது, உண்மையில் கொழுப்பு நிறைந்த பால் பயன்படுத்துவது நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது என்று பரிந்துரைத்தது. இது பால் உள்ள கொழுப்பில் காணப்படும் டிரான்ஸ் பால்மிடோலிக் அமிலமே காரணமாகும். இது உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. 30 முதல் 75 வயதுடைய 3,300 ஆரோக்கியமான நபர்களைப் பற்றிய, 15 ஆண்டுகளாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2016 இல் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், அதிக கொழுப்புள்ள பால் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறைவு என்று தெரிய வந்துள்ளது. அதிலும், கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்பவர்களை விட 44% குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளது. பால் பொருட்களிலிருந்து வெளிவந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்ள மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படுவதாக அதன் ஆசிரியர்கள் பரிந்துரைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும், இன்சுலின் உணர்திறன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.

பால் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்

டைப் -2 நீரிழிவு நோயில், கணையத்தால் போதுமான இன்சுலின் தயாரிக்க முடியாது. எனவே, அவர்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளைக் காண வேண்டியது அவசியம். ஆனால், நீரிழிவு நோயில் காலை உணவின் பங்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் காலை உணவு தவிர்க்க முடியாத பெரும்பங்கைக் கொண்டுள்ளது. ஆராய்ச்சியின் படி, சீரற்ற உணவு பழக்கம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். அதேசமயம், ஒரு நிலையான சிற்றுண்டியை அவ்வபோது எடுத்துக்கொண்டால், அது நீரிழிவு நோய்க்கு உதவியாக இருக்கும். ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோய் நிர்வாகத்தில் பால் மிகவும் பயனளிக்கக்கூடிய உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பால் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பால் குடிப்பது என்பது எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவிடுகிறது.

பால் பொருட்கள் மற்றும் நீரிழிவு நோய்

பால் பொருட்கள் மற்றும் மஞ்சள் நிற சீஸ் (எந்த கார்போஹைட்ரேட்டையும் கொண்டிருக்காத, புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்தவை) பயன்பாடு டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும் என்று பால் பொருட்களின் பயன்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இப்போது உங்களுக்கு தோன்றும் முதல் மற்றும் முக்கிய கேள்வியானது, இந்த புள்ளிவிவரங்களின்படி, நீரிழிவு நோய் இருந்தால் நான் பால் குடிக்கலாமா? ஒரு வேளை பால் குடித்தால், அது எந்த வகையிலாவது நீரிழிவு நோயை பாதிக்கக்கூடுமா என்பது தானே. உங்களது இந்த கேள்விக்கு தற்போது தெளிவான பதில் எதுவும் கூற முடியாது. ஏனென்றால், அதிற்கு பதிலே இல்லை. இந்த விஷயத்தை பொறுத்தவரை, உண்ணும் உணவில் குறைந்த அளவில் பால் சேர்த்துக் கொள்ள தேவையான எளிய ஆலோசனைகளை மட்டுமே எங்களால் உங்களுக்கு வழங்கிட முடியும்.