சொத்தை பற்களால் உடல் ஆரோக்கியம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

நாம் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறையாவது பல் அல்லது ஈறு பிரச்சனைகளை சந்திப்போம். ஆனால் இந்த பிரச்சனைகளை சந்திக்கும் பலர் அவற்றை தீவிரமான ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், அதன் விளைவாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக பற்களில் தொற்றுகள் ஏற்பட்டால், அதனால் பற்கள் அல்லது ஈறுகளினுள் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, சீழ் உருவாக ஆரம்பிக்கும். இந்நிலையில் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறாமல் இருந்தால், அந்த கிருமிகள் உடலினுள் நுழைந்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.

இப்போது எப்படி ஈறுகள் அல்லது பற்களில் ஏற்படும் தொற்றுக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பது குறித்தும், அதற்கான அறிகுறிகளையும் காண்போம்.

பல் தொற்று

பாக்டீரியாக்கள் ஈறுகளினுள் நுழைந்து, சீழ் வடிவில் சேகரிக்கப்படும் போது பற்களில் தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்றுக்களால் வலி அல்லது கூச்சத்தை சந்திக்கக்கூடும். நமது வாயானது உடலினுள் உணவு செல்வதற்கான ஒரு கால்வாய். நாம் உண்ணும் உணவுடன் ஈறுகளில் உள்ள சீழ் அல்லது பாக்டீரியாக்கள் சேர்ந்து உடலினுள் செல்லும் போது, அந்த பாக்டீரியாக்கள் எப்படி உடல் முழுவதும் பரவும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

பல் தொற்றால் சந்திக்கும் தீவிர பிரச்சனைகள்

பற்களில் ஏற்படும் தொற்றுக்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், அது மிகவும் தீவிரமான பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
அவையாவன:
ஆஸ்டியோமைலிடிஸ் – பல்லின் எலும்புகளில் தொற்று
கேவர்னஸ் சைனஸ் த்ரோம்போசிஸ் – இரத்த நாளங்களில் தொற்று
பாராஃபார்னீஜியல் புண் – உங்கள் வாயின் பின்புறத்தில் தொற்று.
செப்சிஸ் – இரத்த தொற்று
செல்லுலிடிஸ் – ஒரு வகை சரும தொற்று
பற்களில் ஏற்பட்டுள்ள தொற்றுகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் அல்லது சிகிச்சையைத் தவிர்த்தால், அந்த தொற்றுக்களானது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பரவி, அங்குள்ள செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும்.

பல் தொற்று உடலின் பிற பகுதிகளுக்கு பரவினால் சந்திக்கும் அறிகுறிகள்

பொதுவாக பற்களில் ஏற்படும் தொற்றுக்கள் உடலின் மற்ற பகுதிகளைப் பாதிப்பது என்பது அரிது தான். இருப்பினும், சில சமயங்களில் இது நிகழக்கூடும் மற்றும் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் கடுமையான பல் வலியுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில அறிகுறிகளையும் சந்தித்தால், உங்கள் பல் தொற்று உடலின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது என்று அர்த்தம்.

அறிகுறிகள்

கன்னம், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம்
நாக்கு மற்றும் வாயில் கடுமையான வலி
சரும அரிப்பு மற்றும் எரிச்சல்
வாந்தி
குமட்டல்
காய்ச்சல்
நாள்பட்ட தலைவலி
பார்வை பிரச்சனைகள்
குழப்பமான மனநிலை
சுவாச பிரச்சனைகள்

பல் தொற்றிற்கான சிகிச்சைகள்

பல் தொற்று என்பது சரிசெய்யக்கூடியது. ஆனால் அது உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதற்குள் சிகிச்சையை மேற்கொள் வேண்டும். தொற்றின் தீவிர தன்மையைப் பொறுத்து, பல் மருத்துவர் ஒருசில சிகிச்சைகளை மேற்கொள்வார்.
அவையாவன:

ரூட் கேனல் சிகிச்சை அல்லது ஆர்.சி.டி – ஆழமான பல் சொத்தை மற்றும் பல் சேதங்களுக்கு ரூட் கேனல் சிகிச்சை நடத்தப்படுகிறது. இது சீழை வெளியேற்ற உதவுவதோடு, கேப்பிங் செய்வதன் மூலம் பற்களை மேலும் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

அபிகோஎக்டோமி – இது ஒரு பல் அறுவை சிகிச்சை போன்றது. இது தொற்றுநோயின் தீவிர நிகழ்வுகளில் மட்டுமே செய்யப்படுகிறது.

ஆன்டி-பயாடிக்ஸ் – ஆரம்ப கட்டத்தில், தொற்றுநோய்க்கு ஆன்டி-பயாடிக் மருந்துகளின் உதவியுடன் எளிதில் சிகிச்சை அளிக்கலாம். இது தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது மற்றும் பரவலையும் தடுக்கிறது.

பல் தொற்றை தடுக்கும் வழிகள்

கீழே பல் தொற்றின் அபாயத்தைக் குறைக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.

தினமும் மருத்துவர் பரிந்துரைக்கும் டூத் பேஸ்ட் கொண்டு இரண்டு வேளை பற்களைத் துலக்க வேண்டும்.
பற்களைத் துலக்கிய உடனேயே எதையும் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது.
அவ்வப்போது மௌத் வாஷ் கொண்டு வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
மோசமான வாய் ஆரோக்கியத்தைக் கொண்டவர்கள், சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் கார்போனேட்டட் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக சீரான இடைவெளியில் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.