உணவு வேளைகளில் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு தினம் ஒரு பொரியலை சமைக்கின்றோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் சமைக்க கூடிய இந்தக் கூட்டு, பொரியல், வறுவல், அவியல் என பல வகைகளில் ஒன்றான ஒருவகை உணவினை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் துணை புரியும் இந்த சௌசௌ காயினை சேர்த்துக் செய்யக்கூடிய கூட்டினை எவ்வாறு செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சௌசௌ – 2, பாசி பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 6, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணை – 3 ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், தேங்காய் விழுது – 2 ஸ்பூன், கொத்தமல்லி இலை – ஒரு கொத்து, சோம்பு தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன். சௌசௌ காயின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து தண்ணீரில் கழுவி விட்டு பிறகு அதனுடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கர் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொண்டு அதன் பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதனுடன் நறுக்கி வைத்த சௌசௌ காய்களையும் சேர்த்து வதக்கி, 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து வேக விட வேண்டும். பின்னர் வேக வைத்துள்ள பருப்பினை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இவை ஒரு பத்து நிமிடங்கள் வேகமான தீயில் கொதிக்க வேண்டும். அதன்பின் இவற்றுடன் உப்பு, தேங்காய் பேஸ்ட் மற்றும் சோம்பு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு அடுப்பை அனைத்து கூட்டினை இறக்கி விட வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin