கீழாநெல்லி அதிசயமான கிடைக்க பெறாத மூலிகை அல்ல. இவை சாதாரணமாக வயல் வரப்புகளிலும், ஈரமான நிலப்பரப்புகளிலும் காணப்படும் சிறு தாவரம். பார்க்க புளியமர இலைகளை போன்று இருக்கும். கீழாநெல்லி இலைகளில் இருக்கும் பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் இந்த இலைகளுக்கு கசப்பு சுவையைத்தருகிறது. இலைகளுக்கு கீழ் நெல்லி போன்று காய் சிறியதாக இருப்பதால் இந்த தாவரத்தை கீழா நெல்லி என்று அழைக்கிறார்கள். இதை அவ்வபோது உணவிலும் சாறாக்கியும் குடித்து ஆரோக்கியத்தை காத்தார்கள். வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப இதை அவ்வபோது பயன்படுத்தினாலும் நோய் வரும் போதும் இதை கொண்டே நிவர்த்தி செய்துகொண்டார்கள். அப்படி அவர்கள் செய்து கொண்ட வைத்தியம் குறித்து தெரிந்துகொள்வோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. கீழா நெல்லியை அரைத்து அப்படியே சாறாக்கி குடிக்கலாம். இதை முடக்கத்தான் போன்று தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம். கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். வெந்நீரில் கலந்து குடிக்கலாம். கீழாநெல்லி வேரை மண் போக சுத்தம் செய்தும் பசும்பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

கீழாநெல்லி இலையை போன்று அதன் காய்களையும் வேரையும் கூட பொடித்து மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். உடல் உறுப்புகளை மட்டும் அல்லாமல் வெளிப்புற அழகையும் பாதுகாக்க இதை பயன்படுத்துவதுண்டு. கூந்தல் வளர்ச்சியிலும் முன்னோர்கள் கீழா நெல்லியை பயன்படுத்தினார்கள். எந்த உறுப்புகளை எப்படியெல்லாம் பாதுகாக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

கிராமங்களில் இன்றும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து வைத்தியத்தை தான் பின்பற்றுகிறார்கள். அலோபதி மருத்துவ சிகிச்சை எடுப்பவர்களும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியத்தையும் சேர்த்து எடுத்துகொள்வதுண்டு. கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். அதிக கசப்பு என்று நினைப்பவர்கள் கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து சிட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரை நீர்மோராக பெருக்கி அதில் விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin