இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் பதபடுத்துவது என்பது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கும். என்ன தான் முயற்சி செய்து மெனக்கெட்டால் கூட ஓரிரு நாட்கள் தான் புளிக்காமல் இருக்கும். பிறகு மூன்றாவது நாளே அதிகம் புளித்துப் போய் தோசை தான் சுட வேண்டி இருக்கும். அவ்வாறு இல்லாமல் ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இட்லி தோசை மாவு புளிக்காமல் வைத்திருப்பதற்கு முதலில் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைப்பவர்கள் கழுவுவது இல்லை. நாம் என்ன தான் போன முறை கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில் ஒட்டியிருக்கும். கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும். குறைந்தது அரிசி மற்றும் உளுந்து 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் புளித்து போக வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு உளுந்தை போட்டு நீங்கள் அரைக்கும் பொழுது கைபடாமல் தண்ணீர் இடையிடையே தெளித்து தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி எடுத்து தள்ளி தள்ளி விட்டு அரைக்கலாம்.

கையை மட்டும் உபயோகப்படுத்த வேண்டாம். உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் மட்டும் தான் நாம் கையால் மாவை எடுப்போம். மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் உபயோகிப்பது சிறந்த தேர்வாக இருக்கும். எவர்சில்வரை விட பிளாஸ்டிக்கில் மாவை எடுத்தால் விரைவில் புளிப்பது இல்லை.

அதன் பின் அரிசியை போட்டு நீங்கள் வழக்கம் போல் எப்படி தண்ணீர் ஊற்றி அரைப்பீர்களோ அதே போல் ஊற்றி அரைக்க வேண்டும். உளுந்தை விட அரிசி சீக்கிரம் அரைபட்டு விடும். அரிசி அரை பட 15 நிமிடமே போதுமானது. அரிசி அரைந்து முடிந்ததும் மாவை எடுக்காமல் கிரைண்டரில் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அளவிற்கு ஆட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து ஒன்றாக சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியமில்லை. கிரைண்டரிலேயே நன்கு கலந்து சூப்பராக வந்து விடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin