இன்றைய பதிவில் கொத்தமல்லி கீரையை மாடித்தோட்டத்தில் சுலபமாக எப்படி வளர்க்கலாம் மற்றும் கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ பயன்களைப் பற்றியும், விரிவாக தெரிந்துகொள்ளலாம். கொத்தமல்லி கீரையை மாடி தோட்டத்தில் வளர்த்து விட்டால் அவர்களை பெரிய விவசாயிகள் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் கொத்தமல்லிக்கீரையை மாடி தோட்டத்தில் வளர்ப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும். ஆனால் சில வழிமுறைகளை பின்பற்றினால் கொத்தமல்லிக் கீரையை நாமும் மாடித்தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் அதிகமாக என்னிடம் கேட்கும் கேள்விகள் இதுதான், கொத்தமல்லிக்கீரை முளைத்து வரவில்லை, முளைத்து வந்தாலும் சாய்ந்து போய்விடுகிறது, தண்டுகள் அழுகிப் போய்விடுகிறது, இந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை சொல்லும் விதமாக இன்றைய பதிவை தயார்செய்திருக்கிறேன். இனி கொத்தமல்லி வளர்ப்பது பற்றி, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

அதிகம் பேர் செய்யும் தவறு இதுதான். கொத்தமல்லிக்கீரையை எந்த காலநிலையில் எப்படி விதைப்பது என்று தெரியாமல் விதைப்பது தான் ஆம்! கொத்தமல்லிக்கீரைக்கு வெயில் சுத்தமாக பிடிக்காது. குளிர் காலங்களில் நன்றாக வளரும். ஜூன், ஜூலை மாதம் செப்டம்பர், அக்டோபர் மாதம் இம்மாதங்களில் கொத்தமல்லியை விதைத்தால் நன்றாக வளரும். முடிந்தவரை கோடைகாலங்களில் கொத்தமல்லிக்கீரையை விதைப்பதை தவிர்ப்பதே சிறந்தது. அவசியம் வளர்க்க வேண்டும் என்றால், கண்டிப்பாக நிழல்வலை அமைத்து விதைப்பது மிகச்சிறந்தது. கொத்தமல்லி விதைகளை விதைக்கும் போது ஒரு விதையை இரண்டாகப் பிரித்து விதைக்கவேண்டும். கொத்தமல்லி விதைகளை துணியில் போட்டு விதைகளுக்கு பாதிப்பில்லாமல் இரண்டாக உடைத்து எடுக்கவேண்டும். அதிகம் அழுத்தம் கொடுத்தால் விதைகளில் பாதிப்பு ஏற்பட்டு விதைகள் முளைக்காமலேயே போய்விடும். அதிகம் பேர் செய்யும் தவறு இதுதான். விதைகளை விதைப்பதற்கு முன் கண்டிப்பாக விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைப்பதினால் முளைப்புத் திறன் அதிகமாகும்.

கொத்தமல்லிக் கீரையின் விதைகள் விதைத்த பிறகு மண்ணின் தரத்தை பொறுத்தும், விதைகளின் முளைப்புத் திறனை பொறுத்தும், எட்டு நாட்களில் இருந்து பத்து நாட்களுக்குள் முளைப்பு வர ஆரம்பிக்கும். விதைகள் முளைத்து வரும் போது தண்ணீர் ஊற்றுவதில் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும். தண்ணீரை அதிக உந்துசக்தியோடு ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin